இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் புறம் பேசுதலின் யதார்த்தத்தைத் தெளிவு படுத்துகின்றார்கள். அதாவது ஒரு சகோதரரைப் பற்றி அவரின் தோற்றம் பற்றியோ அல்லது அவரின் குணம் பற்றியோ அவர் இல்லாத சந்தர்ப்பத்தில் அவர் விரும்பாத ஒரு செய்தியைக் கூறுவதாகும். உதாரணத்திற்கு குறித்த நபர் பற்றி அவர் ஒற்றைக் கண்ணுடையவர், மோசடிக்காரன், பொய்யன் போன்ற மோசமான பண்புகளை அடையாளப்படுத்தும் பெயர்களை கூறுவது புறமாகும். இக்குறித்த பண்புகள் அவரிடத்தில் இருந்தாலும் இது புறம் பேசுவதில் சேரும் என்பதை உணர்தல் வேண்டும். குறித்த பண்புகள் அவரிடத்தில் இல்லாது விட்டால் அது புறத்தை விட மிகவும் கடுமையான விடயமான அபாண்டம் பலி சுமத்துதல் என்ற விவகாரத்திற்கு இட்டுச்செல்லும்.