நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சிறிய தந்தை அபூதாலிபிடம் அவர் மரணத்தருவாயில் இருக்கும் வேளை சென்று அவரிடம் : சிறிய தந்தையே' லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர உண்மையான இறைவன் எவரும் இல்லை) என்று கூறுங்கள். உமக்காக இந்த வார்த்தைக்கு அல்லாஹ்விடம் சான்று பகர்பவனாக இருப்பேன், என்று கூறினார்கள். அதற்கு அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் அபூ தாலிபே ! சிலை வணக்கமான உமது தந்தை அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை விட்டுவிடவா பார்க்கிறீர்? என்று கூறினர். இறுதியாக அபூதாலிப் அவர்கள் தான் அப்துல் முத்தலிபின் மார்க்கமான இணைவைப்பு மற்றும சிலைவணக்கத்தில் இருப்பதாக கூறும் வரையில் அவரிடம்; அவர்கள் இருவரும் அப்துல் முத்தலிபின் மார்க்கம் குறித்து தொடர்ந்தும் கூறிக் கொண்டே இருந்தனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எனது இரட்சகன் தடுக்காது விட்டால் உமக்காக நான் பாவமன்னிப்புக்காக பிரார்த்திப்பேன் என்று கூற, அல்லாஹ்வின் பின்வரும் வசனம் இறங்கியது : "இணைவைத்து வணங்குபவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவிர்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?)" (தவ்பா : 113). மேலும் அபூதாலிப் தொடர்பாக பின்வரும் இறைவசனமும் இறங்கியது : "(நபியே!) நிச்சயமாக இவர்களில் நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உம்மால் முடியாது. எனினும் அல்லாஹ், தான் விரும்பியவர்களை(த்தான்) நேரான வழியில் செலுத்துகிறான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்". (கஸஸ் : 56). ஆக, உம்மால் நீ விரும்பியவரை நேர்வழிப்படுத்திட முடியாது. உமது பணியெல்லாம் எத்திவைப்பது மாத்திரமே! ஆல்லாஹ்வே நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான்.