உஸ்மான் அஷ்ஷஹ்ஹாம் மற்றும் பர்கத் அஸ்ஸப்கீ ஆகியோர், கண்ணியமிக்க நபித்தோழராகிய, அபூ பக்ரா (ரலி) அவர்களது மகனார், முஸ்லிம் அவர்களிடம், தமது தந்தையிடமிருந்து, முஸ்லிம்களுக்கு மத்தியில் நடைபெறும் யுத்தங்கள் மற்றும் குழப்பங்கள் பற்றி ஏதாவது ஹதீஸை செவிமடுத்தார்களா? எனக் கேட்டார்கள். அதற்கவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'ஆம். நபி (ஸல்) அவர்கள், தனது மரணத்திற்குப் பின்னர் சில குழப்பங்கள் நடைபெறும் என்றும், இந்தக் குழப்பங்கள் பற்றி அறியாது, ஒதுங்கி அமர்ந்திருப்பவர், அவற்றைப் பற்றித் தேடிக் கொண்டும், விசாரித்துக் கொண்டும் இருக்காமல், வெறுமனே அவற்றில் நடந்துசெல்பவரை விடச் சிறந்தவர் என்றும், அவ்வாறு நடந்துசெல்பவர், அவற்றைப் பற்றித் தேடிக்கொண்டும், அவற்றில் கலந்து கொண்டும் அவற்றில் ஈடுபடுபவரை விடச் சிறந்தவர் என்றும் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள். பின்பு நபியவர்கள், ஒரு மனிதன் வாழும் காலத்திலோ, அல்லது அவனிடமோ இவ்வாறான குழப்பங்கள் நிகழும் போது, அவனிடம் ஒதுங்கிக் கொள்ளும் இடம் இருக்குமென்றால் அங்கு ஒதுங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றார்கள். எனவே, யாரிடம் ஒட்டகம் இருக்கின்றதோ, அவர் தனது ஒட்டகங்களுடன் போய் இருந்து கொள்ளட்டும். யாரிடம் ஆட்டு மந்தை இருக்கின்றதோ, அவர் தனது ஆட்டு மந்தையுடன் போய் இணைந்துகொள்ளட்டும். யாரிடம் ஒரு நிலமோ, விளைநிலமோ இருக்கின்றதோ, அவர் தனது நிலத்தில் போய் இருந்து கொள்ளட்டும். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வுடைய தூதரே! ஒதுங்கிக் கொள்வதற்காக, ஒட்டகமோ, ஆட்டு மந்தையோ, நிலமோ இல்லாதவர் பற்றி என்ன கூறுகின்றீர்கள்? எனக் கேட்டபோது, 'தனது வாளை நோக்கிச் சென்று, அதன் கூரிய பகுதியை ஒரு கல்லால் அடித்து (உடைத்து) விடட்டும். பின்பு, அவரால் தப்பமுடியுமாக இருந்தால், தன்னோடு தன் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தப்பிக்கொள்ளட்டும்.' என்று கூறினார்கள். பின்பு நபியவர்கள், யா அல்லாஹ்! நான் எத்திவைத்து விட்டேனா? யா அல்லாஹ்! நான் எத்திவைத்து விட்டேனா? யா அல்லாஹ்! நான் எத்திவைத்து விட்டேனா?' என்று கூறி, மூன்று தடவை சாட்சியம் அளித்தார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வுடைய தூதரே! நான் கட்டாயப்படுத்தப்பட்டு, இரு அணிகளில் ஒன்றுடனோ, அல்லது இரு தரப்பினரில் ஒன்றுடனோ கலந்துகொள்ள அழைத்துச் செல்லப் பட்டு, ஒரு மனிதன் என்னை வாளால் வெட்டி விட்டாலோ, அல்லது ஒரு அம்பு வந்து என்னைக் கொண்டு விட்டலோ, எனது நிலை என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், 'அவனது பாவமும், கொல்லப் பட்டவனது பாவமும் அவனையே சேரும். அவன் நரக வாதிகளில் இருப்பான்' என்று கூறினார்கள்.