மாலிக் பின் அவ்ஸ்; என்ற தாபிஈ அவர்கள், தன்னிடம் சில தங்க தீனார்கள் இருந்ததாகவும், அவற்றை வெள்ளி திர்ஹம்களுக்கு மாற்றிக்கொள்ள விரும்பியதாகவும் கூறுகின்றார்கள். அப்போது தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், 'உங்கள் தீனார்களைத் தாருங்கள் பார்க்கலாம்' என்று கூறினார்கள். பின்பு அவர்கள் வாங்குவதாக முடிவெடுத்துவிட்டு, 'எமது பணியாள் வந்த பின்னர் வாருங்கள், நாம் உங்களுக்கு வெள்ளி திர்ஹம்களைத் தருவோம்' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களும் அந்த சபையில் இருந்தார்கள். அப்போது அவர்கள் இந்த வியாபார முறையைக் கண்டித்து, அபூ தல்ஹா இப்போதே அந்த வெள்ளியைக் கொடுக்கவேண்டும். அல்லது தங்கத்தைத் திருப்பிக் கொடுத்து விடவேண்டும் என்று சத்தியமிட்டுக் கூறிவிட்டுக் காரணத்தையும் விளக்கினார்கள். அதாவது, தங்கத்திற்கு வெள்ளியை விற்பதாக இருந்தாலும், வெள்ளிக்குத் தங்கத்தை விற்பதாக இருந்தாலும், உடனுக்குடனே விற்கவேண்டும். அவ்வியாபாரம் தடுக்கப்பட்ட வட்டியாகவோ, பிழையான வியாபாரமாகவோ இருக்கக்கூடாது. எனவே, தங்கத்தை தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும் உடனுக்குடன் விற்று, அவ்விடத்திலேயே மாற்றிக் கொள்ளவேண்டும். தொலி நீக்கப்பட்ட கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, பேரீத்தம்பழம் ஆகியவையும், ஒரே அளவில் நிறுக்கப்பட்டு, அல்லது ஒரே அளவாக அளக்கப்பட்டு, உடனுக்குடன் விற்கப்படவேண்டும். அவற்றில் எந்தவொன்றும் தவணை பிற்படுத்தி விற்க முடியாது. பொருட்களை மாற்றிக் கையகப் படுத்திக்கொள்ள முன்னர், பிரிந்து செல்ல முடியாது.