உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வுழுசெய்யும் முறையை, அழகிய முறையில் தெளிவு படுத்தும் நோக்கில் செயன்முறை ரீதியாக கற்றுக் கொடுத்தார்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொண்டு வரக் கூறி அதனை தனது இருகைகளிலும் மூன்று முறை ஊற்றி கழுவிவிட்டு, பின்னர் தனது வலது கையை பாத்திரத்தினுள் இட்டு நீரை எடுத்து வாயிலிட்டு நன்றாக அந்நீரை சுலட்டி, பின்னர் அதனை வெளியே கொப்பளித்ததோடு, அதே நீரால் நாசினுள் இட்டு அதனை வெளியே சிந்தினார்கள். அதனைத் தொடர்ந்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின் முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவினார்கள். அதனைத் தொடர்ந்து ஈரக்கையால் தலையை ஒரு தடவை தடவினார்கள். பின்னர் கரண்டைக்கால் உட்பட இரு கால்களையும் கழுவினார்கள். உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வுழு செய்து முடிந்ததும் தான் வுழூச் செய்ததைப் போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழூச் செய்ததை தான் பார்த்ததாக அவர்களிடம் தெரிவித்தார்கள். அத்துடன் அவர்கள்; வுழு செய்ததைப் போன்று வுழுசெய்து விட்டு தனது இரட்சகனுக்கு முன் நின்று உள்ளச்சத்துடன் மெய்நிலையில் - உள்ளத்தை ஓர்நிலைப்படுத்தியவராக இரண்டு ரக்அத்துக்கள் தொழுதால் அவரின் முழுமையான வுழுவிற்கும் தூய்மையான அவரின் தொழுகைக்கும் அல்லாஹ் அவரின் முன்சென்ற சிறுபாவங்களை மன்னித்து கூலி வழங்குகிறான் என்ற நற்செய்தியையும் குறிப்பிட்டார்கள்.