அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறுமை நாளின் பெரிய அடையாளங்களில் ஒன்றாக கிழக்கிலிருந்து சூரியன் உதிப்பதற்கு பதிலாக மேற்கிலிருந்து சூரியன் உதிக்கும் என்பதையும், இப்பெரு நிகழ்வை மக்கள் பார்த்ததும் அனைவரும் அல்லாஹ்வை ஈமான் -நம்பிக்கை- கொள்வார்கள் என இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இவ்வேளை காபிரின் -இறைநிராகரிப்பாளனின் ஈமானோ, நற்காரியங்களோ, தவ்பா-பாவமீட்சியோ- எவ்விதப்பயனையும் தரமாட்டாது. தொடர்ந்தும் நபியவர்கள் இந்த ஹதீஸில் ' மக்கள் அனைவரும் அவர்களின் அன்றாட விவகாரங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையில் திடிரென எதிர்பாராத விதமாக மறுமை சம்பவிக்கும் என அறிவிக்கிறார்கள். விற்பவரும், வாங்குபவரும் (விற்பனைக்காத்) துணிகளை விரித்து(ப் பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள்; சுருட்டிக்கூட வைத்திருக்க மாட்டார்கள் அவ்வாறு இருக்கும் நிலையில் மறுமை சம்பவிக்கும். ஒருவர் மடியில் பால் நிறைந்த தம் ஒட்டகத்தில் பால் கறந்து இன்னும் அதைப் பருகிக் கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். ஒருவர் தம் நீர் தொட்டியை அப்போதுதான் கல்வைத்துப் பூசியிருப்பார்; இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். ஒருவர் தம் உணவை சாப்பிடுவதற்காக வாயருகில் கொண்டு சென்றிருப்பார்; அதை உண்டிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.