அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்திலும், அவருக்குப் பிறகு வந்த கலீஃபாக்கள் காலத்திலும், முஸ்லிம்கள் சிறியவர்கள் அல்லது பெரியவர்கள் என ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ஸாஉ உணவை ஸகாத்துல் பித்ராக கொடுத்து வந்தனர். அந்த நாட்களில் அவர்களின் உணவு: பார்லி, உலர்ந்த திராட்சை, பதப்படுத்தப்பட்ட பாலாடைக் கட்டி மற்றும் பேரீச்சம்பழம் ஆகியவனாகும். ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துகளாகும். ஒரு முத் என்பது ஒரு சாதாரண மனிதனின் இரண்டு கைப்பிடிகள் கொள்ளும் கொள்ளளவிற்கு நிகரானதாகும். முஆவியா (ரழி) அவர்கள் கலீபாவாக இருக்கும் வேளை மதீனாவிற்கு வந்தார். அந்நேரம் சிறிய கோதுமை அதிகளவில் காணப்பட்டது. மதீனாவுக்கு வந்த போது மக்களுக்கு ஓர் உரை நிகழ்த்தினார்; அதில் அவர் : இரண்டு முத்து சிறிய கோதுமை ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்குச் சமம் என்று தான் அபிப்பிராயப்படுவதாக குறிப்பிட்டார்கள். எனவே மக்கள் அவரது கூற்றின்படி செயல்படத் தொடங்கினர். ஆனால் இக்கருத்தை அபூ ஸஈத் (ரழி) ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வேளை அபூ ஸஈத் (ரழி) அவர்கள்: நான் உயிருடன் இருக்கும் வரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் நான் கொடுத்தது போலவே, ஸகாத்துல் பித்ரை கொடுப்பேன் என்று கூறினார்.