நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கிராமப்புரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் தனக்கு சுவர்கம் செல்வதற்குரிய செயலொன்றை காட்டித்தருமாறு கோரி நபியர்வகளிடம் வந்தார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சுவர்கம் நுழைவதும்; நரகத்திலிருந்து மீட்சி பெறுவதும் இஸ்லாத்தின் கடமைகளான அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி வழிபட்டு அவனுக்கு எதனையும் இணைவைக்காது வாழ்வதில் தங்கியுள்ளது எனப் பதிலளித்தார்கள். அத்துடன் தினமும் அடியார்களுக்கு அல்லாஹ் கடமையாக்கியுள்ள ஐவேளைத் தொழுகைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் உமக்கு அல்லாஹ் கடமையாக்கியுள்ள உமது செல்வத்திற்கான ஸகாத்தை வழங்குவதுடன்,அதனை ஸகாத் பெற தகுதியானவர்ளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் அதே போன்று ரமழான் மாதத்தில் நோன்பை பேணி கடைபிடித்தொழுக வேண்டும். இவ்வாறு நபியவர்கள் கூறிய போது வந்த அந்த மனிதர் எனது ஆன்மா எவனின் கைவசம் உள்ளதோ அவனின் மீது ஆணையாக நபியவர்களே உங்களிடமிருந்து செவிமடுத்த கட்டாயக் கடமைகளுக்கு மேலதிகமாக எந்த வணக்கத்தையும் செய்யமாட்டேன் அவற்றில் எதனையும் குறைக்கவும் மாட்டேன் என சத்தியம் செய்து கூறினார். அந்த மனிதர் திரும்பிச் சென்றதும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (உங்களில் ) யார் சுவர்க்க வாதிகளில் ஒருவரை பார்த்து சந்தோசப்பட விரும்புகிறாரோ அவர் இந்த கிராமப்புற அரபியை பார்த்துக்கொள்ளட்டும் என்றார்கள்.