நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் தனது அடியானுடன் மறுமையில் இரகசியமாகப் பேசுவது பற்றி இவ்வாறு கூறினார்கள்: மறுமையில் ஒரு விசுவாசி தனது ரப்புக்கு நெருக்கமாக அழைக்கப்படுவான். அவ்விசுவாசியின் இரகசியத்தை ஏனையோர் அறியாமல் இருக்க, அல்லாஹ் ஏனையோரை விட்டும் அவனை மறைத்துப் பின்வருமாறு கூறுவான்: இன்ன இன்ன பாவங்கள் நினைவில் உள்ளதா? என்று கேட்டு, இவ்வாறே, தனக்கும் அவ்வடியானுக்கும் மத்தியில் உள்ள எல்லாப் பாவங்களையும் ஒப்புக்கொள்ளச் செய்வான். அவன், 'ஆம் ரப்பே!" என்று கூறுவான். அப்போது விசுவாசி திடுக்கிட்டுப் பயந்தவுடன், அல்லாஹ், 'இவ்வுலகில் இவற்றை நான் மறைத்திருந்தேன்; இன்று நான் அவற்றை மன்னித்து விடுகின்றேன்’ என்று கூறுவான். அச்சமயம் அவனது நன்மைகள் ஏடு அவனிடம் வழங்கப்படும். நயவஞ்சகர்களும் இறைமறுப்பாளர்களும் சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, “இவர்கள்தான், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என அறிவிக்கப்படும்