ஒரு பெண் தனது பொறுப்புதாரிகளின் அனுமதி இன்றி தானாகவே திருமணம் செய்து கொள்வதை நபியவர்கள் எச்சரித்து, அது செல்லுபடியற்றது என்று மூன்று தடவைகள் கூறினார்கள். அதாவது, அவ்வாறான திருமணம், நடக்காத ஒரு திருமணத்தை போன்று என்பதை உணர்த்துகின்றார்கள். திருமணம் செய்து கொண்டவன், அவளது பொறுப்புதாரிகளின் அனுமதி இன்றி அவளோடு உறவு கொண்டிருந்தால், அவளது மர்மஸ்தானத்தில் உறவு கொண்ட காரணத்தினால் மஹர் முழுவதும் அவளுக்கு வழங்கப்படும். திருமணத்திற்கு பொறுப்பாக வருவதில் சம அந்தஸ்தில் உள்ள பலர் முரண்பட்டுக் கொண்டால் அவர்களின் ஒப்பந்தத்திற்கு யார் முந்திக் கொள்கின்றாரோ, அவரே தகுதியானவர். ஆனால் அவர் அவளுக்கு நலவு நாடுபவராக இருக்க வேண்டும். ஒரு பொறுப்புதாரி பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுக்காமல் தவிர்ந்து வந்தால், அவள் பொறுப்புதாரி அற்றவளாகக் கொள்ளப்பட்டு, நாட்டுத் தலைவரோ அல்லது அவருக்குப் பதிலாக உள்ள நீதிபதிகள் போன்றோரோ பொறுப்புதாரி ஆகிவிடுவார்கள். அவ்வாறில்லாமல் பொறுப்புதாரி ஒருவர் இருக்கும் போது நாட்டுத் தலைவர் வலியாக வர முடியாது.