மக்களிடம் தமக்குள்ள உரிமைகளாகிய, செவிசாய்த்தல், வழிப்படல் போன்றவற்றை கேட்டுப் பெற்றுக் கொண்டுவிட்டு அவர்கள் மீதுள்ள கடமைகளாகிய, நீதமாக நடத்தல், போர்ச்செல்வங்களைக் கொடுத்தல், அநியாயத்தைத் தடுத்தல், சமத்துவம் பேணல் போன்றவற்றைக் கொடுக்காமல் இருக்கும் ஆட்சியாளர்கள் விடயத்தில் என்ன செய்வது? என்று நபியவர்களிடம் கேட்கப்பட்டது. நபியவர்கள் இந்தக் கேள்விகளை வெறுத்தது போன்று, பொருட்படுத்தாது இருந்துவிட்டார்கள். ஆனாலும், கேள்விகேட்டவர், இரண்டு மூன்று தடவைகள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். உடனே, அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள், அவரை மௌனிக்கச் செய்வதற்காக இழுத்து எடுத்தார்கள். அப்போது நபியவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் : அவர்களது வார்த்தைகளுக்கு செவிசாயுங்கள்! அவர்களது கட்டளைக்கு அடிபணியுங்கள். அவர்கள் மீது கட்டாயப்படுத்தப்பட்டு, சுமத்தப்பட்டுள்ள நீதம், பிரஜைகளின் உரிமைகளைக் கொடுத்தல் போன்றவை அவர்களது கடமைகளாகும். உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள, கட்டுப்படல், கடமைகளை நிறைவேற்றல், சோதனைகளில் பொறுமையாக இருத்தல் போன்றவை உங்கள் மீது கடமையானவையாகும்.