அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களுக்கு உள்ளங்கள் நடுங்கி, கண்கள் கண்ணீர் சிந்துமளவிற்கு மிகவும் ஆழமான ஒரு உபதேசத்தை செய்தார்கள். அவ்வுபதேசத்தின் கனதியை அவதானித்த தோழர்கள்; 'அல்லாஹ்வின் தூதரே! இது விரைவில் பிரிந்து செல்லும் ஒருவரின் அறிவுரையாயிற்றே. எனவே, உங்களுக்குப் பின் கடைப்பிடித்தொழுகும் படியான அறிவுரையை எங்களுக்கு கூறுங்கள்' என்றார்கள். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ் விதித்த கடமைகளை செய்வதன் மூலமும் தடுத்தவிடயங்களை விலகி நடப்பதன் மூலமும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அறிவுரை கூறுகிறேன் என்றார்கள். மேலும் தலைவர்களுக்கு செவிசாய்த்து கட்டுப்பட்டு நடக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன். உங்களுக்கு ஓர் அடிமை தலைவராக நியமிக்கப்பட்டாலும், அல்லது அதிகாரத்தை பொறுப்பேற்றாலும், அதாவது உங்களில் அந்தஸ்தில் குறைந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டாலும், குழப்பங்கள் ஏற்படுவதைப் பயந்து அவரை புறக்கணிக்காது அவருக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள். அத்துடன் உங்களில் எனக்குப்பின் வாழ்வோர் அதிகமான கருத்து முரண்பாடுகளை –பிரச்சினைகளை –கண்டுகொள்வார். பின்னர் இந்த முரண்பாடுகளிலிருந்து தப்பிக்கும் வழியை தெளிவுபடுத்துகிறார்கள். அதுவே அவர்களினதும் அவர்களுக்கு பிறகு வந்த நேர்வழி நடந்த கலீபாக்களான அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரழியல்லாஹு அன்ஹும் போன்றோரினது வழிமுறையை பின்பற்றுவதாகும். அதனைப் பின்பற்றி அதில் உறுதியாக இருப்பதுமாகும். மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்படுகின்ற நூதன விடயங்களை விட்டும் அவர்களை எச்சரிப்பதோடு அனைத்து பித்அத்துக்களும் வழிகேடு என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.