மக்கள் 5ம் அத்தியாயத்தின் 105 ம் வசனத்தை ஓதிவருவருவதாக அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகிறார்கள். (விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறியவர் உங்களுக்கு எவ்வித தீங்கும் செய்ய மாட்டார்). ஒரு மனிதனைப் பொருத்தவரை அவனை மாத்திரம் சீர்செய்துகொள்வதற்காக பாடுபடுவதுதான் கடமை என்பதையும் அத்துடன் மற்றவர் வழிதவறிச்செல்வதால் தனக்கு அது ஒருபோதும் தீங்கு விளைவிக்காது என்பதையும், நன்மையை ஏவி தீமை தடுப்பதற்கான பொறுப்புக் கிடையாது அது தேவையில்லை என்பதாகவே இவ்வசனத்தின் மூலம் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வசனத்தின் கருத்து அதுவல்ல. நபிஸல்லல்லாஹு அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு குறித்த பின்வரும் செய்தியை அறிவிக்கிறார்கள் : மக்கள் அநியாயம் செய்யும் ஒருவனை கண்டு, தடுப்பதற்கான சக்தியிருந்தும் அவனின் அநியாயத்தை தடுக்காதிருந்தால் அல்லாஹ் அவனின் தண்டனையை அனைவர் மீதும் விரைவில் இறக்கிவைப்பான். இத்தண்டனைக்கு தீமையை செய்தவனும் அதனை கண்டு மௌனம் காத்தவனும் உட்படுவான்.