நபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா, மாவு அரைத்ததால் தனது கையில் ஏற்பட்ட தழும்புகள்; குறித்து தனது தந்தையிடம் முறையிட்டார். சில கைதிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது, வீட்டு வேலைகளில் தனக்கு உதவ அவர்களில் ஒருவரைக் கேட்க நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அவ்வேளை நபியவர்கள் வீட்டில் இருக்கவில்லை. ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை கண்டு விவரத்தை கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வந்த போது, பாத்திமா (ரழி) அவர்கள் ஒரு பணியாளரைக் கேட்பதற்காக வந்துவிட்டு சென்ற செய்தியைக் ஆஇஷா (ரழி) நபியவர்களிடம் கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பாத்திமா மற்றும் அலி (ரழி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அந்த நேரத்தில், இருவரும் படுக்கையில் படுத்து உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளை நபியவர்கள் அவர்களுக்கு இடையே அமர்ந்தார்கள், அப்போது அலி (ரழி) தனது வயிற்றில் நபியவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை உணர்ந்தார். பின்னர் அவர்கள் இருவரிடமும் நபியவர்கள் கூறினார்கள்: ' நீங்கள் இருவரும் என்னிடம் ஒரு வேலைக்காரனைக் தருமாறு கேட்டதைவிடவும் சிறந்த ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்கள் இருவரும், 'ஆம்' என்றார்கள். அப்போது நபியவர்கள் அவர்களிடம் இவ்வாறு கூறினார்கள் : நீங்கள் இருவரும் இரவில் படுக்கைக்குச் செல்லும்போது, அல்லாஹு அக்பர் என்று 34 முறை சொல்லுங்கள். சுப்ஹானல்லாஹ் என்று 33 முறை சொல்லுங்கள். அல்ஹம்துலில்லாஹ் என்று 33 முறை சொல்லுங்கள். இந்த திக்ர் ஒரு வேலைக்காரனை விட உங்கள் இருவருக்கும் சிறந்தது என்றார்கள்.