ஒரு பெருநாள் தினம் நபி (ஸல்) அவர்கள் தொழுமிடத்திற்குச் சென்றார்கள். ஏற்கனவே, பெண்களிடம், அவர்களுக்குத் தனியாக உபதேசிப்பதாக வாக்களித்திருந்தார்கள். அந்நாளில் அதை நிறைவேற்றினார்கள். நபியவர்கள் இவ்வாறு உபதேசித்தார்கள்: பெண்களே! தர்மம் செய்யுங்கள். அதிகம் பாவமன்னிப்புக் கேளுங்கள். இவ்விரண்டும் பாவமன்னிப்பின் மிக முக்கிய காரணிகளாகும். மிஃராஜ் உடைய இரவில், உங்களை நான் நரகவாதிகளில் அதிகமானவர்களாகக் கண்டேன். அப்போது அவர்களில் இருந்த அறிவும், புத்திசாதுர்யமும், நிதானமும் மிக்க ஒரு பெண், நாம் ஏன் நரகவாதிகளில் அதிகமானவர்களாக இருக்க வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள், 'பல காரணங்களினால். அதிகம் ஏசுகின்றீர்கள், சபிக்கின்றீர்கள், கணவனது உரிமையை மறுக்கின்றீர்கள். பின்பு நபியவர்கள் அவர்களை இவ்வாறு வர்ணித்தார்கள்: அறிவும், தீர்க்கமும், தன் விவகாரங்களைக் கையாளும் திறமையும் கொண்ட ஒரு ஆணையே மிகைப்பவர்களாக, அறிவும், மார்க்கமும் குறைவாக உள்ள பெண்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை. அப்போது அப்பெண், 'அல்லாஹ்வின் தூதரே! அறிவிலும், மார்க்கத்திலும் குறையிருத்தல் என்பதன் அர்த்தம் என்ன? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: பகுத்தறிவுக் குறைபாடென்பது, ஒரு ஆணின் சாட்சியத்திற்கு நிகராக இரு பெண்களின் சாட்சியம் இருப்பதாகும். இது அவளது பகுத்தறிவுக் குறைபாடாகும். மார்க்கத்தில் குறைபாடென்பது, நல்லமல்களின் குறைபாடாகும். அதாவது, மாதவிடாய் காரணமாக பல நாட்கள் அவள் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்கின்றாள். இதுவே மார்க்கத்தில் குறைபாடு. எனினும், இதற்காக அவர்கள் குற்றம்பிடிக்கப்படவோ, கண்டிக்கப் படவோ மாட்டார்கள். இது அவர்களது இயற்கையான படைகோலம். இது, மனிதன் இயற்கையிலேயே பணத்தை விரும்புபவனாகவும், தன் விவகாரங்களில் அவசரப்படுபவனாகவும், அறியாமையுள்ளவனாகவும் இருப்பதைப் போல. இங்கு நபியவர்கள் அதைக் குறித்துக் கூறியது, அவர்களால் குழப்பத்திற்குள்ளாகாமல் இருக்கவே.