இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வுலகமானது சுவையில் இனிமையானது எனவும் பார்ப்பதற்கு கவர்ச்சி நிறைந்ததாகவும் உள்ளது எனவும் தெளிவுபடுத்துகிறார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறக் காரணம் என்னவெனில் மனிதன் இதில் கவர்ச்சியுற்று மூழ்கிச்செல்வது மாத்திரமல்லாது அதனையே தனது முழு இலக்காகவும் ஆக்கிக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது என்பதினாலாகும். நாம் இவ்வுலகில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோமா அல்லது கட்டுப்படாது நடக்கிறோமா? என்ற எமது செயல் முறை குறித்து அவதானிக்கவே இவ்வுலகில் எம்மை ஒருவர் பின் ஒருவராக பிரதிநிதியாக வைத்துள்ளான். மேலும் நபியர்கள் இந்த ஹதீஸில் இவ்வுலக பொருட்கள் மற்றும் அலங்காரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பணிக்கிறார்கள். ஏனெனில் இவ்வுலக இன்பங்களில் திழைத்திருப்பது அல்லாஹ் உங்களுக்கிட்ட கட்டளைகளை விட்டுவிட்டு அவன் தடுத்த விடயங்களின் பால் அவை இட்டுச்செல்ல வழிவகுத்து விடும். இஸ்ரவேல் சந்ததிகளில் ஏற்பட்ட குழப்பங்களில் முதன்மையானது பெண்கள் சம்பந்தப்பந்தப் பட்டது என்பதினால், உலக கவர்ச்சிகளில் பெண்களின் கவர்ச்சியிலிருந்து எச்சரிக்கையாக இருப்பதே மிக முக்கிய விடயமாகும்.