அல்லாஹ்வின் தூதரிடம் தனது கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு குழுவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தது குறித்து அபூமுஸா அல் அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஜிஹாதில் கலந்து கொள்வதற்கு அவர்களை ஏற்றிச்செல்ல ஒரு ஒட்டகத்தை வழங்குமாறு கோரியே நபியவர்களிடம் அவர்கள் சென்றார்கள். அப்போது நபியவர்கள் தன்னிடம் அவர்களை ஏற்றிச்செல்வதற்கான ஒட்டகம் இல்லையென்பதால் அவர்களை ஏற்றிச்செல்ல முடியாது என சத்தியம் செய்தார்கள். உடனே அவர்கள் திரும்பிச்சென்று சற்று நேரம் தாமதித்துக் காத்திருந்தார்கள். பின் நபியவர்களுக்கு மூன்று ஓட்டகைகள் கிடைத்தன அவற்றில் ஒன்றை அவர்களுக்கு நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். அப்போது அவர்களில் சிலர் மற்றவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களை ஏற்றிச் செல்லமாட்டோம் என சத்தியம் செய்திருப்பதால் இந்த ஒட்டகத்தில் அல்லாஹ் பரக்கத் செய்ய மாட்டான் என்று கூறினார்கள். உடனே அவர்கள் நபியவர்களிடம் வந்து இது குறித்து விசாரிக்கவே, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உங்களை ஏற்றி அனுப்புபவன் அல்லாஹ். ஏனெனில் அவனே அதற்கான நல்வாய்ப்பை தந்து அதற்கான வசதியை ஏற்படுத்தினான். என்னைப் பொறுத்தவரை நான் இது நிகழ்வதற்கான ஒரு காரணமாகவே உள்ளேன் என்றும் குறிப்பிட்டார்கள். தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில் , அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ் நாடினால், நான் ஒரு விஷயத்தைச் செய்வதாகவோ அல்லது கைவிடுவதாகவோ சத்தியம் செய்துவிட்டு, சத்தியம் செய்ததை விட மிக சிறந்த ஒன்றை காணும் பட்டசத்தில் சத்தியம் செய்ததை விட்டுவிட்டு மிகச் சிறந்ததை தேர்வு செய்து விட்டு என் சத்தியத்திற்கான பரிகாரத்தை செய்வேன் என்று கூறினார்கள்.