தனக்கு முன்னர் வந்த எந்த நபிக்கும் கொடுக்கப் படாத, ஐந்து சிறப்புக்கள் தனக்கு வழங்கப் பட்டுள்ளதாக நபியவர்கள் அறிவிக்கின்றார்கள். முதலாவது, பயத்தைக் கொண்டு நான் உதவி செய்யப்பட்டுள்ளேன். எனது எதிரிகள் ஒரு மாதகாலம் பயணம் செய்யும் தூரத்தில் இருந்தாலும், அவர்களது உள்ளத்தில் என்னைப் பற்றிய பயம் போடப்பட்டிருக்கும். இரண்டாவது, பூமி எமக்குத் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது. நாம் எங்கிருந்தாலும் தொழலாம். நீரைப் பயன்படுத்த முடியாத போது, (பூமியில் உள்ள) மண், சுத்தத்தைத் பெற்றுத் தரும் ஒன்றாகவும் உள்ளது. மூன்றாவது, முஸ்லிம்கள், நிராகரிப்பாளர்களுடனான யுத்தத்தில் பெற்றுக் கொள்ளும் போர்ச்செல்வங்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. நான்காவது, மறுமையின் பயங்கர நிலையில் இருந்து மக்களுக்கு விடிவை வழங்குவதற்கான 'ஷபாஆ உழ்மா' எனப்படும் மாபெரும் பரிந்துரை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாவது, மனித, ஜின்கள் என எல்லாப் படைப்புக்களுக்கும் நான் நபியாக அனுப்பட்டுள்ளேன். அவர்களுக்கு முன்னர் இருந்த நபிமார்கள் அவ்வாறல்ல. அவர்கள் தமது சமுதாயத்திற்கு மாத்திரமே நபியாக அனுப்பப்படுவார்கள்.