நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் வரம்புகளை பின்பற்றி அவனின் கட்டளைகளின் மீது உறுதியாக இருந்து நன்மையை ஏவி தீமையை தடுப்போருக்கும், அல்லாஹ்வின் வரம்புகளை துவம்சம் செய்து மீறி நடந்து, நன்மையான விடயங்களை விட்டுவிட்டு, தீமையான விடயங்களை செய்வோருக்குமான ஓர் உதாரணத்தையும், சமூகத்தின் மீட்சியில் அது எவ்வளவு தாக்கம் செலுத்துகிறது என்பதையும் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் இருசாராரும் கப்பலில் பயணம் செய்யும் ஒரு கூட்டத்திற்கு ஒப்பானவர்கள், அவர்களில் மேல்தளத்தில் இருப்போர் கீழ்த்தளத்தில் இருப்போர் யார் என்பதை அறிந்து கொள்ள சீட்டுக்குழுக்கப்பட்டது. அதன்படி அவர்களில் சிலருக்கு மேல்தளமும் சிலருக்கு கீழ் தளமும் கிடைத்தது.கீழ் தளத்தில் உள்ளோருக்கு நீர் தேவைப்பட்டால் மேள்தளத்தில் உள்ளோரை கடந்தே அவர்கள் செல்ல வேண்டியிருந்தது. ஆகவே கீழ்தளத்தில் இருந்தோர் நாம் இருக்கும் கீழ் தளத்தில் ஒரு துளையை இட்டுக்கொண்டால் அதனூடாக நீர் பெறலாம், அதனால் மேல் தளத்தில் உள்ளோருக்கு எங்களால் எந்தத் தொல்லையும் கிடையாது என்று கூறிக்கொண்டார்கள். கப்பலின் மேல்தளத்தில் உள்ளோர் இக்காரியத்தை செய்யுமாறு அவர்களை விட்டுவிட்டால் கப்பலுடன் சேர்ந்து அனைவரும் மூழ்கிவிடுவார்கள்.