அல்லாஹ்வின் கூலியையும், மக்களிடமிருந்து புகழையும் நற்பெயரையும் தேடி முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிட்ட ஒருவரின் நிலை குறித்து நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். அவருடைய கேள்வி, அல்லாஹ்விடமிருந்து அவருக்கு ஏதேனும் கூலி கிடைக்குமா என்பதுதான். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் தனது நோக்கத்தில் மற்றவர்களை அல்லாஹ்வுடன் இணை வைத்ததால் அவருக்கு எந்த கூலியும் கிடைக்காது என்று பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவர் மூன்று முறை அதே கேள்வியைக் கேட்டபோதும் நபி (ஸல்) அவர்கள் அதே பதிலையே மீண்டும் கூறினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் ஒருவரின் செயல்கள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சிறந்த அடிப்படையை விவரித்தார்கள். அல்லாஹ்வுக்கு முழுமையாகக் அடிபணிந்து, அவனுக்கு எதையும் அல்லது யாரையும் இணையாக்காமல், அவனுடைய கூலியை மட்டுமே எதிர்பார்த்து செய்யப்படும் செயல்கள் மாத்திரமே அவனால் ஏற்றுக்கொள்ளப்படும் செயல்களாகும். இந்த அடிப்படைக்கு மாற்றமாக அமைந்த எந்தச் செயலையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை.