நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அடியார்கள் காலையை அடையும் ஒவ்வொரு நாளிலும், இரு மலக்குகள் இறங்கி, ஒருவர் "யா அல்லாஹ்! தர்மம் கொடுப்பவருக்கு பதிலாக மேலும் கொடுப்பாயாக" என்றும், மற்றவர், "யா அல்லாஹ்! தர்மம் செய்யாமல் வைத்துக்கொள்பவருக்கு அழிவைக் கொடுப்பாயாக" எனவும் பிரார்த்திப்பார்கள். சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும் இரு மலக்குகள் இறங்கி பிரார்த்திப்பார்கள் என நபியவர்கள் கூறுகின்றார்கள். ஒருவர் இவ்வாறு கூறுவார்: "யா அல்லாஹ்! வணக்கங்களுக்காகவும், குடும்பத்திற்காகவும், விருந்தாளிகளுக்காகவும், உபரியான நற்கருமங்களுக்காகவும் செலவழிப்பவர்களுக்கு அவற்றை விடச் சிறந்த ஒன்றைப் பதிலாக வழங்கி, அவருக்கு அபிவிருத்தியை ஏற்படுத்துவாயாக" மற்றவர் இவ்வாறு கூறுவார்: செலவழிக்காமல் வைத்துக் கொள்பவருக்கு அழிவைக் கொடுப்பாயாக! உரியவர்களுக்குக் கொடுக்காமல் தடுத்துக்கொண்ட அவரது சொத்தை அழித்துவிடுவாயாக!

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • கொடுப்பவருக்கு, அதற்குப் பகரமாக அதைவிடச் சிறந்தவை கிடைக்கவேண்டும் எனப் பிரார்த்திக்கலாம். அல்லாஹ் கடமையாக்கியவற்றில் செலவழிக்காமல் தடுத்துக்கொண்டு கஞ்சத்தனம் காட்டுபவரின் சொத்துக்கள் அழியவேண்டும் எனவும் பிரார்த்திக்கலாம்.
  • மலக்குகள் தர்மம் செய்யும் நல்ல விசுவாசிகளுக்கு நன்மையும், அபிவிருத்தியும் கிடைக்கவேண்டும் எனப் பிரார்த்திப்பார்கள். அவர்களது துஆ ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது.
  • குடும்பத்திற்காக செலவழித்தல், உறவுகளை சேர்ந்து நடக்க செலவழித்தல், நல்ல வழிகளில் செலவழித்தல் போன்ற கடமையான, ஸுன்னாவான அம்சங்களில் செலவழிக்கத் தூண்டல்.
  • நல் வழிகளில் செலவழிப்பவரின் சிறப்பு; அதாவது, அதன் விளைவு, அல்லாஹ் அதற்குப் பதிலாக மேலும் கொடுப்பான் என்பதே! அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் எதையாவது செலவழித்தால் அதற்கு அவன் பகரம் தருவான். வாழ்வாதாரம் அளிப்பவர்களில் அவனே சிறந்தவன். (ஸபஉ : 39)
  • இந்த துஆ, கடமையான செலவினங்களை செய்யாமல் இருப்பவருக்கு எதிரானதாகும். ஸுன்னாவான செலவினங்கள் இதில் நுழையமாட்டாது. ஏனெனில், அவர் இந்த துஆவிற்குத் தகுதியானவர் அல்ல.
  • கஞ்சத்தனம் தடுக்கப்பட்டதாகும்.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு