நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆறு என தெளிவு படுத்துகிறார்கள் அவை பின்வருமாறு : முதலாவது : ஒரு முஸ்லிமைச் சந்தித்தால் அஸ்ஸலாமு அலைக்கும் என வாழ்த்து கூற வேண்டும். அவர் அதற்கு வஅலைக்குமுஸ்ஸலாம் என பதில் கூறுவார். இரண்டாவது : வலீமா –திருமணவிருந்து- போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக அழைத்தால் அவரின் அழைப்பை ஏற்று கலந்து கொள்ளுதல். மூன்றாவது: ஏதாவது ஒரு விடயத்தில் அறிவுரை கேட்டால் அவருக்கு மனதார அறிவுரை கூறுங்கள். இந்த விடயத்தில் அவருக்கு ஏதாவது சலுகைக் காட்டி உண்மையை மறைக்கவோ அல்லது ஏமாற்றவோ கூடாது. நான்காவது: அவர் தும்மிய பின் அல்ஹம்து லில்லாஹ் என்று கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் என்று கூறுங்கள். அதற்கவர் யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹு பாலகும் என்று பதிலுரைப்பார். ஐந்தாவது : அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை சுகம் விசாரியுங்கள். ஆறாவது : அவர் மரணித்துவிட்டால் அவருக்கு தொழுகை நடாத்தி அவரை அடக்கம் செய்யும் வரை அவரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வது.