இங்கு நபியவர்கள், ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியன் உதிக்க முன்னரும், ஒவ்வொரு நாள் மாலையிலும் சூரியன் மறைய முன்னரும் மூன்று தடவைகள் இந்த துஆவை ஓதுவதன் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்துகின்றார்கள். எவனுடைய பெயர் இருக்கும் போது(அதாவது, கூறப்படும் போது), இவ்வானத்திலோ,(மேலும் அதில் இருந்து இறங்கும் சோதனைகளோ) பூமியிலோ (மேலும் அதில் இருந்து வெளிப்படும்) சோதனைகளோ) எந்தவொன்றும் (அது எவ்வளவு பெரியதாக இருப்பினும்) தீங்கை ஏற்படுத்த மாட்டாதோ, அந்த அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (காலையை, மாலையை) அடைகின்றேன் (அவனைக்கொண்டே அனைத்துத் தீங்குகளை விட்டும் பாதுகாப்பும் தேடுகின்றேன்) அவன் (எமது வார்த்தைகளைக்) கேட்பவனாகவும் (எமது நிலைமைகளை) அறிந்தவனாகவும் உள்ளான். யார் மாலையை அடையும் போது இவ்வாறு கூறுகின்றாரோ, அவர் காலையை அடையும் வரை திடீர் சோதனைகள் எதுவும் அவருக்கு ஏற்படமாட்டாது. யார் காலையை அடையும் போது இவ்வாறு கூறுகின்றாரோ, அவர் மாலையை அடையும் வரை திடீர் சோதனைகள் எதுவும் அவருக்கு ஏற்படமாட்டாது. இந்த ஹதீஸை அறிவிக்கும் அபான் இப்னு உஸ்மான் (ரஹ்) அவர்களுக்கு பக்கவாதம் (அதாவது, உடம்பின் ஒரு பாதி செயலிழந்து போதல்) ஏற்பட்டிருந்தது. எனவே, அவரிடம் இந்த ஹதீஸைக் கற்ற மனிதர் ஆச்சரியமாக அவரைப் பார்த்தார். அப்போது அவர் அந்த மனிதரைப் பார்த்து, 'ஏன் என்னைப் பார்க்கின்றீர்கள்?' அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. எனினும், எனக்கு இந்த நோய் ஏற்பட்ட தினம், நான் அதை ஓதவேண்டும் என அல்லாஹ் விதித்திருக்கவில்லை. எனவே, எனக்கு ஒரு கோபம் ஏற்பட்டபோது, நான் மேற்குறிப்பிட்ட இந்த வசனங்களைக் கூற மறந்துவிட்டேன்.' என்று கூறினார்கள்.