தொழுகையில் ஈடுபடும் ஒருவருக்கு தான் தொழுதது மூன்று ரக்அத்துக்களா? அல்லது நான்கு ரக்அத்க்களா? என்ற சந்தேகம் (தடுமாற்றம்) ஏற்பட்டால் அவர் தொழுததாக சந்தேகிக்கும் நான்காம் ரக்அத்தை தொழுததாக கொள்ளாது, மூன்று ரக்அத்க்கள் தொழுததாக உறுதியாக கொண்டு நான்காம் ரக்அத்தை நிறைவேவுற்றுவார். பின் ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதிக்கான இரு ஸஜ்தாக்களை செய்வார். அவ்வாறு அவர் தொழுதது உண்மையில் நான்காக இருந்தால் அவர் இன்னொரு ரக்அத்தை சேர்த்து தொழுவதால் ரக்அத்துக்களின் எண்ணிக்கை ஜந்தாக மாறும். ஆனால் அவர் மேலதிக ரக்அத்துக்கான ஸஜ்தா(ஸுஜுத் ஸஹ்வு) ஒரு ரக்அத்திற்கு பகரமாக காணப்படுவதால் அந்தத் தொழுகையின் எண்ணிக்கை இரட்டைப்படையாக அமையுமே தவிர ஒற்றைபடையாக அமையாது. அவர் மேலதிகமாக தொழும் ரக்அத்தினால் நான்கு ரக்அத் தொழுதிருந்தால் அன்னார் எவ்வித கூடுதல் குறைவின்றி தொழுகையை நிறைவேற்றியுள்ளார். தொழுகையை முடிப்பதற்கு முன் செய்யும் மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்கள் ஷைத்தானுக்கு அவமானத்தையும், தோல்வியையும் ஏற்படுத்துவதோடு ஒரு முஸ்லிமை வழிகெடுக்கும் அவனது இலக்கிலிருந்து அவனைத் தூரப்படுத்தி அவனை இழிவின் பால் நகர்த்துகிறது. இந்நிலைக்கான காரணம் அவன் தொழுகையில் ஈடுபவரிடம்; தடுமாற்றத்தை ஏற்படுத்தி அதனை வீணாக்குவதற்கு எத்தனித்ததாகும். இருப்பினும், ஷைத்தான்; ஆதமுக்கு சிரம் தாழ்த்தி அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய மறுத்த அதே செயலின் மூலம் மனிதன் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, ஸஜ்தா செய்த போது இறையடியானின் தொழுகை முழுமையடைந்து விட்டது.