ஒரு நம்பிக்கை கொண்ட ஆணோ, அல்லது பெண்ணோ சோதனைகளுக்கு ஆட்படாமல் ஒரு போதும் இருக்கமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சில நேரங்களில் சோதனையானது ஒரு முஃமினின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாகக் காணப்படும். உதாரணமாக அவரது ஆரோக்கியம் மற்றும் உடல்நிலை சார்ந்ததாக இருக்கும். சில நேரங்களில் சோதனையானது குழந்தைகளுடன் தொடர்புடையதாக காணப்படும், உதாரணமாக பிள்ளைகள் நோய்வாயப்டுதல், இறந்து போதல் அல்லது கீழ்படியாது நடத்தல், நோவினை செய்தல் போன்றவைகளை குறிப்பிடலாம். சில நேரங்களில் சோதனை செல்வத்துடன் தொடர்பானதாக இருக்க முடியும். உதாரணமாக வறுமையை எதிர்கொள்ளுதல், வியாபாரம் முழுமையாக நஷ்டம்அடைதல், செல்வம் திருடப்படுதல், பொருளாதார மந்தநிலை, நெருக்கடியை எதிர்கொள்ளல் போன்றவற்றை குறிப்பிடலாம். இந்த சோதனைகளின் விளைவாக, அல்லாஹ் அடியானின் அனைத்து பாவங்களையும் அழித்து விடுகிறான், இறுதியாக அவன் அல்லாஹ்வைச் சந்திக்கும் போது, அவன் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் அவன் தூய்மையடைகிறான்.