நபி (ஸல்) அவர்கள், மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய இரண்டு மிகப் பெரிய அருள்களைப் பற்றி கூறியுள்ளார்கள். அவை ஆரோக்கியம் மற்றும் ஓய்வு நேரம் ஆகும். இந்த இரண்டு அருள்களையும் பலர் சரியான முறையில் பயன்படுத்தாமல் வீணடிப்பதால் நஷ்டமடைகிறார்கள். ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமும் ஓய்வு நேரமும் கிடைத்தும், அல்லாஹ்வை வழிபடுவதில் சோம்பல் காட்டினால், அவன் உண்மையான நஷ்டவாளியாகிறான். இத்தகைய நிலை பெரும்பாலான மக்களிடம் காணப்படுகிறது. ஆனால், ஒருவர் தனது ஓய்வு நேரத்தையும் ஆரோக்கியத்தையும் அல்லாஹ்வின் வழிபாடு மற்றும் நன்மையான செயல்களில் பயன்படுத்தினால், அவன் வெற்றியாளன் ஆவான். இந்த உலகம் மறுமைக்கான பயிர் நிலம் போன்றது. இங்கு நாம் செய்யும் நன்மைகளின் பலன் மறுமையில் கிடைக்கும்.