இங்கு நபியவர்கள், அல்லாஹ், தனது நிழலைத் தவிர வேறு நிழல்கள் இல்லாத அந்த (மறுமை) நாளில் ஏழு தரப்பினருக்கு தனது அர்ஷின் நிழலைக் கொடுப்பான் என நற்செய்தி கூறுகின்றார்கள் : முதலாமவர் : தன்னில் தீயவராக அல்லாத, நீதம் மிக்கவராகவும், தனது பிரஜைகளுக்கு மத்தியில் அநீதமிழைக்காது நீதம் செலுத்துபவராகவும் இருப்பவராகும். இங்கு நாடப்படுபவர், நாட்டுத் தலைவராகும். எனினும், முஸ்லிம்களின் ஏதாவது விவகாரங்களைப் பொறுப்பேற்று, அதில் நீதமாக நடந்துகொள்ளும் அனைவரும் இதனுள் வருவர். இரண்டாமவர் : அல்லாஹ்வை வணங்குவதிலேயே வளர்ந்த வாலிபன். மேலும் மரணிக்கும் வரை, தனது வாலிபத்தையும், பலத்தையும் அதிலேயே செலவழித்தவர். மூன்றாவது : தான் பள்ளியில் இருந்து வெளியேறியதும், மீண்டும் அதில் நுழையும் வரை அதனுடனேயே உள்ளம் பிணைக்கப்பட்டு இருக்கும் மனிதன். அதற்கான காரணம், அதன் மீதுள்ள ஆழ்ந்த நேசமும், அதில் அதிகமாக இருப்பதும், உடலில் ஏதாவது ஏற்பட்டாலும், பள்ளிவாசலுக்கு வெளியே இருந்தாலும், உள்ளத்தால் எப்போதும் அதிலேயே இருப்பதும் ஆகும். நான்காமவர் : உண்மையில் அல்லாஹ்வுக்காக மாத்திரமே தமக்கிடையில் நேசம் பாராட்டிக் கொண்ட இருவர். அவ்விருவரும் மரணம் வரும் வரை, எந்தவொரு உலக நோக்கங்களுக்காகவும் தமது இந்த மார்க்க நேசத்தை துண்டித்துக் கொள்ளாதவர்கள். உண்மையில் அவர்கள் ஒன்றிணைந்து இருந்தாலும் அல்லது இல்லா விட்டாலும் சரியே! ஐந்தாமவர் : நல்லகுடும்பமும், மதிப்பும், சிறப்பும், பணமும், அழகும் கொண்ட ஒரு பெண் மானக்கேடான ஒரு செயலில் ஈடுபடுவதற்காக அவரை அழைக்கும் போது, மறுத்து, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்' என்று கூறி விலகியவர். ஆறாமவர் : குறைவாகவோ, அதிகமாகவோ தர்மம் செய்யும் ஒரு மனிதர். மேலும், அதில் முகஸ்துதியுடன் செயற்படாமல், தனது வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத அளவு மறைத்துக் கொடுத்தவர். ஏழாமவர் : மக்களை விட்டும் தனித்து இருக்கும் நிலையில், நாவினால் திக்ர் செய்தோ அல்லது உள்ளத்தால் அல்லாஹ்வை நினைவுபடுத்தியோ, அவன் மீதுள்ள அச்சத்தாலும், அவனது மகத்துவத்தை நினைத்தும் அழுதவர்.