ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தனக்கு சில உறவினர் இருப்பதாகவும், அவர்களோடு தான் நல்லமுறையில் நடந்துகொண்டாலும் அவர்கள் அதற்கு நேர்மாற்றமாகவே நடக்கின்றனர் என்று முறைப்பட்டார். அதாவது, அவர்களைச் சேர்ந்து நடந்தாலும், அவர்கள் துண்டித்தே நடக்கின்றனர். அவர்களுக்கு நல்லுபகாரம் புரிந்தாலும், அவர்கள் அநீதமிழைத்து, தீங்கிழைக்கின்றனர். அவர்களை மன்னித்துவிட்டாலும், அவர்கள் மோசமான சொல், செயற்கள் ஊடாக மடமைத்தனமாக நடந்துகொள்கின்றனர். இவ்வாறிருக்க தொடர்ந்தும் அவர்களை சேர்ந்து நடப்பதா? எனக் கேட்டார். அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: நீ கூறுகின்றது போலவே உண்மையில் நடந்திருந்தால், நீ அவர்களுக்கு இழிவையே கொடுக்கின்றாய். நீ நிறைய நல்லுபகாரம் புரிந்தும், அவர்கள் அசிங்கமாக நடந்து கொள்வதால், நீ அவர்களுக்கு சூடான சாம்பலைக் கொடுப்பது போன்று தான் இது உள்ளது. அவர்களுக்கெதிராக உனக்கு உதவி செய்யும் ஒருவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இருந்து கொண்டே இருப்பார். நீ தொடர்ந்து அவர்களுக்கு உபகாரம் செய்து கொண்டும், அவர்கள் உனக்கு அநீதமிழைத்துக் கொண்டும் இருக்கும் காலமெல்லாம் அவர் உன்னை விட்டும் தீங்குகளைத் தடுப்பார்.