அபூ தர் ஜுன்துப் இப்னு ஜுனாதா (ரலி) அவர்களும், அபூ அப்திர் ரஹ்மான் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அறிவிக்கின்றார்கள் : நீர் எங்கிருந்த போதிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! ஒரு பாவத்திற்குப் பின்னர் ஒரு நன்மை செய்துவிடு. அது அப்பாவத்தை அழித்துவிடும். மேலும், மக்களோடு நற்பண்புடன் நடந்துகொள். இது நம்பகமானது (ஸஹன்) என இமாம் திர்மிதி கூறியுள்ளார் - இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

இங்கு நபியவர்கள் மூன்று விடயங்களைக் கொண்டு ஏவுகின்றார்கள் : முதலாவது : இறையச்சம். அதாவது, கடமைகளைப் பேணிச் செய்வதுடன், எல்லா இடங்களிலும், காலங்களிலும், நிலைகளிலும், இரகசியத்திலும், வெளிப்படையிலும், ஆரோக்கியத்திலும், சோதனையிலும் பாவங்களைத் தவிர்த்தல். இரண்டாவது : ஏதாவதொரு பாவத்தை செய்துவிட்டால், அதற்குப் பின்னர், தொழுகை, தர்மம், உபகாரம், உறவுகளை சேர்ந்து நடத்தல், தவ்பா போன்ற நன்மைகளை செய்துவிடல். அவை அப்பாவத்தை அழித்துவிடும். மூன்றாவது : மக்களோடு, அவர்களது முகத்தில் புன்னகைத்தல், மென்மையாக நடந்துகொள்ளல், உபகாரம் புரிதல், நோவினைகளைத் தடுத்தல் போன்ற நற்குணங்களுடன் நடந்துகொள்ளுங்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • அல்லாஹ் தனது அருட்கொடைகள், பாவமன்னிப்பு, பிழைப் பொறுத்தல் என்பவற்றின் மூலம் அடியார்களுக்குச் செய்துள்ள பேருபகாரம்.
  • இந்த ஹதீஸ் மூன்று விதமான கடமைகளையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது, இறையச்சம் மூலம் அல்லாஹ்வுக்கு நிறைவேற்றவேண்டிய கடமை, பாவங்களின் பின்னர் நன்மைகள் செய்வது கொண்டு தனது ஆத்மாவுக்கு செய்யவேண்டிய கடமை, நற்குணத்துடன் நடந்துகொள்வதன் மூலம் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்பனவே அவையாகும்.
  • பாவங்களுக்குப் பின்னர் நன்மைகளில் ஈடுபடுவதற்கு ஆர்வமூட்டல். நற்குணமும் இறையச்சத்தின் பண்புகளில் உள்ளதாகும். அது தனித்துக் கூறப்படக் காரணம், அதைத் தெளிவாகக் கூறுவதற்கான தேவை இருப்பதனாலாகும்.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு