விசுவாசிகளின் தாயார், ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் நபி (ஸல்) அவர்களிடம், 'ஸபிய்யா இவ்வாறு இருப்பதே உமக்குப் போதும்' (அறிவிப்பாளர்களில் ஒருவர், ஆஇஷா அவர்கள் அவர் குள்ளமானவராக இருப்பதை நாடியதாகக் கூறுகின்றார்) என்று கூறினேன். அப்போது நபியவர்கள், "நீர் கூறிய இந்த வார்த்தையை கடலில் கலந்துவிட்டால் அதுவும் நாற்றமடைந்துவிடும்" என்று கூறினார்கள். நான் ஒரு மனிதரைப் பற்றி அவர்களிடம் செய்து காட்டினேன். அப்போது நபியவர்கள், 'நான் எந்த மனிதனையும் பற்றி அவ்வாறு பேச விரும்புவதில்லை. அதற்காக, எவ்வளவு வழங்கப் பட்டாலும் சரியே' என்று கூறினார்கள். சரியானது - இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
explain-icon

விளக்கம்

ஆஇஷா (ரலி) அவர்கள் நபியவர்களிடம், 'உம்முல் முஃமினீன் ஸபிய்யாவிடம் உள்ள உடல் குறைகளில், அவர் குள்ளமானவராக இருப்பதே போதும்' என்று கூறுகின்றார்கள். அப்போது நபியவர்கள், "நீர் கூறிய இந்த வார்த்தையை கடலில் கலந்துவிட்டால் அதுவும் நாற்றமடைந்து விடும்" என்று கூறினார்கள். மேலும், ஒரு மனிதரை ஏளனப்படுத்தும் விதமாக, அவர் செய்வது போன்ற ஒன்றை செய்து காட்டினேன். அப்போது நபியவர்கள், ஏளனப் படுத்தும் விதமாக, அவ்வாறு அவரது குறைகளைப் பேசுவதையோ, அவரைப் போன்று செய்து காட்டுவதையோ, அவர் பேசுவது போன்று பேசிக் காட்டுவதையோ நான் விரும்புவதில்லை. அதற்காக உலக ஆதாயங்கள் நிறைய வழங்கப்பட்டாலும் சரியே! என்றும் கூறினார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • புறம் பேசுவதை எச்சரித்தல்.
  • மனிதர்களை ஏளனப்படுத்தி, இழிவுபடுத்தும் விதமாக அவர்களைப் போன்று நடித்துக்காட்டுவது தடுக்கப்பட்ட புறம் ஆகும்.
  • உடல் குறைகளை வர்ணிப்பது புறமின் ஒரு பிரிவாகும்.
  • காழி அவர்கள் கூறுகின்றார்கள் : (இந்த ஹதீஸில் வந்துள்ள) மஸ்ஜ் என்பது, ஒன்றுடன் இன்னொன்றை இணைத்துக் கலக்குவதாகும். இதன் அர்த்தமாவது, இந்தப் புறம், கடலில் கலக்கப்படும் ஒன்றாக இருந்தால், அவ்வளவு பிரமாண்டமான கடலையே அதன் நிலையில் இருந்து மாற்றிவிடும். அப்படியாயின், அது கலக்கப்படும் சாதாரண அமல்களின் நிலை எவ்வாறு இருக்கும்?
  • மனைவியர்க்கு மத்தியில் ஏற்படும் ரோஷத்தைத் தெளிவுபடுத்தல்.
  • நபியவர்கள் பாவத்தை ஆமோதிக்காமை.
  • உலகமும் அதில் உள்ளவையும் அல்லாஹ்வின் திருப்தி மற்றும் அவனது கோபத்தை அடையாமை ஆகியவற்றுடன் ஒப்பிடப்படும் போது அற்பமாக உள்ளமை.
  • இஸ்லாம் நற்பண்புகளின் மார்க்கமாகும். வார்த்தைகள் அல்லது செயற்கள் ஊடாக மானங்கள் மீறப்படுவதை விட்டும் அது பாதுகாக்கின்றது. ஏனெனில், அது முஸ்லிம்களுக்கு மத்தியில் விரோதத்தையும், குரோதத்தையும் ஏற்படுத்துகின்றது.