இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அனைத்து செயற்பாடுகளும் நிய்யத்தைக் கொண்டே கணிக்கப்ப்படுவதாக தெளிவுபடுத்துகிறார்கள். இந்த சட்டமானது வணக்கங்கள் நடைமுறை சார்ந்த விடயங்கள் அனைத்திற்கும் பொதுவானது. யார் தனது செயற்பாட்டினூடாக உலகியல் நலனை நாடினால் அவர் அதை மாத்திரமே அடைந்துகொள்வார். அவருக்கு எந்த கூலியும் கிடையாது. யார் தனது செயற்பாடுகளினூடாக அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகிறரோ, அவரின் அந்த செயலுக்கு வெகுமதியும் கூலியும் கிடைக்கும். குறிப்பிட்ட அந்த செயல் குடித்தல் சாப்பிடுதல் போன்ற அன்றாட செயல்களாக இருந்தாலும் சரியே. வெளிப்படையில் குறித்த செயலானது ஒரே மாதிரியாக இருந்தாலும் நிய்யத் -எண்ணமானது எந்தளவிற்கு தாக்கம் செலுத்துகிறது என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு உதாரணத்தைக் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் குறிப்பிடுகையில் யார் அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரமே நாடி தனது தாயகத்தை துறந்து (ஹிஜ்ரத்) செல்கிறரோ அவரின் ஹிஜ்ரத் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹிஜ்ரத்தாகும். அவரின் உண்மையான நிய்யத்திற்கு கூலி வழங்கப்படும். யார் தனது ஹிஜ்ரத்தின் போது உலகியல் நலன்களான செல்வம், அல்லது புகழ் அல்லது வியாபாரம் அல்லது மனைவி போன்ற விடயங்களை அடைந்து கொள்ளும் நோக்கில் சென்றிருந்தால் அவரின் நிய்யத்தில் (எண்ணத்தில்) அவர் அடைந்து கொள்ள விரும்பும் நலனைத் தவிர வேறு எதனையும் அடைந்து கொள்ளமாட்டார். அவருக்கு எந்த வெகுமதியோ கூலியோ கிடைக்காது என நபியவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.