இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, ஒரேகாலத்தில் ஒன்றுசேரும் மக்கள் தலைமுறையினரில், நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் வாழ்ந்த தலைமுறையினரே சிறந்த தலைமுறையாகும். பின்பு அவர்களை அடுத்து வரும், நபித்தோழர்களது காலத்தை அடைந்த, நபி (ஸல்) அவர்களது காலத்தை அடையாத முஃமின்கள் வருவார்கள். பின்பு அவர்களை அடுத்தவர்கள் வருவார்கள். அவர்கள் தாம், அத்பாஉத் தாபிஈன்களாகும். அவர்களையும் அடுத்து, நான்காவது தலைமுறையாக வருபவர்களைப் பற்றி நபியவர்கள் கூறினார்களா என்ற விடயத்தில் அந்த நபித்தோழர் உறுதியற்றவராகக் காணப்பட்டார். பின்பு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : அவர்களுக்குப் பின்னர் சில மக்கள் வருவார்கள். அவர்கள் துரோகம் செய்வார்கள். மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள். சாட்சியம் அளிக்க அழைக்கப்பட முன்னரே, சாட்சியம் அளிப்பார்கள். நேர்ச்சை வைப்பார்கள். ஆனால், நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடம் கொழுப்பு வெளிப்படும் அளவு அதிகமாக உண்ணவும், பருகவும் செய்வார்கள்.