ஒரு உண்மையான விசுவாசி தனது ஈமானில் உண்மையாக இருந்து அதில் மனநிம்மதியைக் கண்டால், அந்த ஈமானின் விளைவாக உள்ளம் விரிவடைந்து ஆறுதல், மகிழ்ச்சி மற்றும் அல்லாஹ்வை நெருங்குவதால் கிடைக்கும் இன்பம் ஆகியவற்றை தனது இதயத்தில் அனுபவிக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த நிலையை அடைய, அவர் மூன்று விடயங்களை மனமுவந்து ஏற்று திருப்திகொள்ளவேணடும்;. அவை வருமாறு: முதலாவது: அல்லாஹ்வை தனது இறைவனாகவும் இரட்சகனாகவும் ஏற்றுக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். அல்லாஹ் தனது இறைவனாக இருப்பதால், அவன் வழங்கும் வாழ்வாதாரங்கள் மற்றும் அவன் விதித்துள்ள பல்வேறு நிலைகளில் திருப்தி அடைய வேண்டும். இவற்றில் எதற்கும் அவன் இதயத்தில் எந்த முரண்பாடும் இருக்கக்கூடாது. அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த இறைவனையும் அவன் தேடக்கூடாது. இரண்டாவது: இஸ்லாத்தை தனது மார்க்கமாக கொண்டு திருப்தி அடைய வேண்டும். இஸ்லாம் உள்ளடக்கியுள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகளில் அவன் திருப்தி அடைய வேண்டும். இஸ்லாத்தின் வழிகாட்டலைத் தவிர வேறு எந்த வழிகாட்டலையும் ஏற்று நடப்பவராக அவர் இருக்கக்கூடாது. மூன்றாவது: நபிகள் நாயகம் (ﷺ) அவர்களைத் தனது தூதராகக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். நபி (ﷺ) அவர்களிடமிருந்து வந்த எந்த விஷயத்திலும் அவருக்கு எந்த சந்தேகமோ, தடுமாற்றமோ ஏற்படாத அளவுக்கு அவர் மன நிறைவுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அத்துடன் வாழ்க்கையில் நபியவர்களின் வழிமுறை மற்றும் முன்மாதிரிக்கு ஏற்ப செல்லும் பாதையை மட்டுமே பின்பற்றி செல்ல வேண்டும்.