யமனில் இருந்து அலி (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட ஒரு தோல்பையில் மண் நீக்கப்பட்டிராத சிறிய ஒரு தங்கக் கட்டியை நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை நபியவர்கள் நால்வருக்குப் பங்கு வைத்தார்கள். உயைனா இப்னு பத்ர், அக்ரஃ இப்னு ஹாபிஸ், ஸைத் அல் கைல் அந்நப்ஹானீ, அல்கமா இப்னு அல்லாஸா அல்ஆமிரீ ஆகியோரே அந்த நால்வரும் ஆகும். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், இவர்களை விட இதைப் பெற நாமே தகுதியானவர்களாக இருந்தோம் என்று கூறினார். இது நபியவர்களுக்கு எட்டவே, நபியவர்கள், 'நீங்கள் என்னை நம்பமாட்டீர்களர்? நான் வானத்தில் இருப்பவனிடம் நம்பிக்கைக்கு உரியவனாக உள்ளேன். காலையிலும், மாலையிலும் வானத்தின் செய்திகள் எனக்கு வருகின்றன.' என்று கூறினார்கள், அப்போது கண்கள் குழிவிழுந்து, வெளிப்பட்டிருந்த, கன்னங்கள் உப்பிய, நீளமற்ற அடர்த்தியான தாடியைக் கொண்ட, தலைமுடி மலிக்கப்பட்ட, உடலின் கீழ்ப்பகுதியை மறைக்கும் கீழாடை வரிந்துகட்டப்பட்டிருந்த ஒரு மனிதர் எழுந்து, 'அல்லாஹ்வுடைய தூதரே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்' என்று கூறினார். அப்போது நபியவர்கள் : 'உனக்குக் கேடு உண்டாகட்டும். பூமியில் உள்ளவர்களிலேயே அல்லாஹ்வை அஞ்சுவதற்கு அதிகம் கடமைப்பட்டவனாக நான் இல்லையா?' என்று கேட்டார்கள். பின்பு அந்த மனிதர் சென்றுவிட்டார். அப்போது காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வுடைய தூதரே! அவருடைய கழுத்தை வெட்டட்டுமா?' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், 'இல்லை. அவர் தொழக்கூடியவர்களாக இருக்கலாம்' என்று கூறி விட்டார்கள். அப்போது காலித் இப்னுல் வலித் அவர்கள், 'தொழும் எத்தனையோ பேர், தமது உள்ளத்தில் இல்லாததை நாவினால் பேசுகின்றார்கள்' என்று கூறினார். உடனே நபியவர்கள், 'மக்களுடைய உள்ளங்களை ஆராய்ச்சி செய்துபார்க்குமாறும், அவர்களது வயிறுகளைப் பிளந்து பார்க்குமாறும் நான் ஏவப்படவில்லை. மாறாக, அவர்களது வெளிப்படையான விடயங்களை எடுக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்.' என்று கூறினார்கள். பின்பு அம்மனிதர் திரும்பிச் செல்வதைப் பார்த்த நபியவர்கள், 'இந்த மனிதரினதும் அவரது தோழர்களினதும் அல்லது அவரது கோத்திரத்தினதும் சந்ததியில் ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை திறமையாகவும், இனிமையான குரலிலும் ஓதுவர். அதை அதிகம் ஓதுவதால் அவர்களது நாவு ஈரமாக இருக்கும். ஆனால், அது அவர்களது தொண்டைக் குழிகளைத் தாண்டி, உள்ளங்களை அடைந்து அதை சீர்த்திருத்த மாட்டாது. அவற்றை அல்லாஹ் உயர்வடையச் செய்யவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டான். (எரியப்பட்ட அம்பு) வேட்டைப் பிராணியின் உடம்பில் இருந்து (அதைக் கிழித்துக்கொண்டு) வெளியேறுவதைப் போல, இவர்கள் மார்க்கத்தை விட்டும் வேகமாகவும், இலகுவாகவும் வெளியேறி விடுவார்கள். மேலும், 'அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வால் ஏந்திப் போராடும் காலத்தை நான் அடைந்து கொண்டால், ஸமூத் கூட்டத்தினர் அழிக்கப் பட்டதைப் போன்று, அவர்களை நான் அழித்து விடுவேன்.' என்று நபியவர்கள் கூறியதாகவும் நான் நினைக்கின்றேன்.