அல்லாஹ் தஆலா ஹதீஸ் குத்ஸியில் பின்வருமாறு கூறுவதாக நபியவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஆதமுடைய மகனின் அனைத்து அமல்களும், பத்து மடங்கு தொடக்கம் எழுநூறு மடங்கு வரை பன்மடங்காக்கப்படும். நோன்பைத் தவிர. ஏனெனில், அதில் முகஸ்துதி வர வாய்ப்பில்லை என்பதால், அது எனக்கே உரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். அதற்கான கூலியின் அளவு மற்றும் அதன் நன்மைகள் பன்மடங்காக்கப் படுவது பற்றிய அறிவு என்னிடமே உள்ளது. பின்பு அல்லாஹ் கூறுகின்றான் : நோன்பு ஒரு கேடயமாகும். அதாவது, நரகை விட்டும் பாதுகாக்கும் திரையாகவும், பலமான கோட்டையாகவும் அது இருக்கும். ஏனெனில், நோன்பு என்பது இச்சைகளையும், பாவத்தில் வீழ்வதையும் தவிர்ப்பதாகும். நரகம் இச்சைகளாலேயே சூழப்பட்டுள்ளது. உங்களில் ஒருவர் நோன்புடைய தினத்தில் இருந்தால், அவர் முற்றாகவே கெட்ட வார்த்தைகளைப் பேசவேண்டாம். (இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 'ரபஸ்' என்ற வார்த்தைக்கு, 'உடலுறவிலோ, அதற்குத் தூண்டக்கூடியவற்றிலோ ஈடுபடவேண்டாம்' என்ற அர்த்தமும் உள்ளது. அவர் (இரைச்சல்கள், தர்க்கங்கள் என்பவற்றின் மூலம்) சப்தமிடவும் வேண்டாம். ரமழானில் (யாராவது அவரை ஏசினால், அல்லது சண்டைக்கு வந்தால்) நான் நோன்பாளி எனக் கூறிவிடட்டும். அப்போது அவர் சிலவேளை தவிர்ந்து கொள்வார். அவர் உண்மையிலேயே சண்டையிடுவதிலேயே விடாப்பிடியாக இருந்தால், அத்துமீறுபவர்களைத் தடுப்பது போன்று, இலகுவான படிமுறைகளைக் கடைப்பிடித்துத் தடுக்கட்டும். பின்பு நபியவர்கள், நோன்பின் காரணமாக நோன்பாளியின் வாயில் ஏற்படும் மாற்றமான வாடை, ஜும்ஆக்களிலும், திக்ருடைய சபைகளிலும் பூசிக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்ட, உங்களிடமுள்ள கஸ்தூரியின் வாடையை விட மறுமையில் மணமானதாகவும், சிறந்த கூலியைத் தரக்கூடியதாகவும் இருக்கும் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்கின்றார்கள். நோன்பாளிக்கு மகிழ்ச்சியைத் தரும் இரு சந்தோசங்கள் உள்ளன : நோன்பு துறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தில் அவன் நோன்பு துறக்கும் போது, பசி மாற்றும் தாகம் நீங்குவது கொண்டும், அவனது வணக்கம் பூரணமடைந்து, நோன்பு நிறைவடைந்ததாலும், இறைவன் புறத்தில் இருந்து வந்த அந்த இலகுபடுத்தலாலும், அது அடுத்த நோன்புகளைப் பிடிக்க உதவியாக இருப்பதாலும் அவன் சந்தோசப்படுகின்றான். அவன் தனது ரப்பைச் சந்தித்தால், தனது நோன்பைக்கொண்டு (அதாவது அதற்கான கூலியைக் கொண்டு) அவன் சந்தோசப்படுவான்.