அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தமது தோழர்களுடன் ஒரு விருந்துபசாரத்தில் இருந்தார்கள். அப்போது (சமைக்கப்பட்ட) ஆட்டின் முன்கால் ஒன்று அவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டது. அதன் இறைச்சி அவர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. (அதை) நபி (ஸல்) அவர்கள் தம் பற்களால் கடித்து அதிலிருந்து சிறிது உண்டார்கள். பின்னர் நபியவர்கள் அவர்களிடம் பேசினார்கள். அல்லாஹ் தன்மீது புரிந்துள்ள அருளை வெளிப்படுத்திக் கூறும் முகமாக 'நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். என்று குறிப்பிட்டார்கள். தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில், பின்னர் அவர் கூறினார்: 'எதன் காரணமாக என்று உங்களுக்குத் தெரியுமா?' மறுமை நாளில் மக்கள் அனைவரும் விசாலமான, சமதரையான, மிகவும் நீண்ட ஒரே தளத்தில் ஒன்றுகூடச் சேர்க்கப் படுவார்கள். அங்கே இருப்பவர்கள் அனைவரும் அழைப்பவரின் குரலை தெளிவாகக் கேட்பார்கள்; பார்ப்பவரின் பார்வையிலிருந்து யாரும் மறைய முடியாது. நிலம் சமமாக இருப்பதால், யாரும் ஒளிந்து கொள்ள ஏதுவான இடமில்லை. பார்வை அனைவரையும் எட்டும். ஒருவர் பேசினால், அங்கே இருக்கும் கடைசி மனிதருக்குக் கூட அது கேட்கும். பார்வையும் அனைவரையும் அடையும். அப்போது சூரியன் படைப்புகளுக்கு ஒரு 'மீல்' அளவிற்கு நெருங்கிவரும். அதாவது சுர்மா பூசுவதற்கு பயன்படுத்தப்படும் குச்சியின் நீலத்திற்கு அளவாக மிக நெருக்கமாக சூரியன் கொண்டுவரப்படும். அதன் காரணமாக மக்கள் சகிக்க முடியாத அளவிற்கு துயரத்தையும் கவலையையும் துன்பத்தையும் அனுபவிப்பார்கள். அதனால் அவர்கள் விடுதலை பெறுவதற்காக தமக்கு ஷஃபாஅத் (பரிந்துரை) செய்வோரைத் தேடுவார்கள், அப்போது அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு, மனிதகுலத்தின் தந்தையான ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்ல வேண்டும் என்ற உள்ளுணர்வை ஏற்படுத்துவான். அவர்கள் ஆதம் நபியிடம் சென்று, அவர்களின் சிறப்புகளைச் கூறி, 'நீங்கள் மனிதர்களின் தந்தை. அல்லாஹ் உங்களைத் தனது கையால் படைத்தான்; மலக்குகளை உங்களுக்கு முன் ஸஜ்தா செய்ய வைத்தான்; எல்லா பொருள்களின் பெயர்களையும் உங்களுக்கு கற்றுக்கொடுத்தான்; உங்களுள் அவனது உயிரை ஊதினான். ஆகவே, எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுங்கள்' என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், 'இன்று என் இறைவன் என்றுமே இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை; இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான்' என்று கூறுவார். பின்னர், அல்லாஹ் தடை செய்த மரத்திலிருந்து தாம் உண்ட தவறை நினைவு கூர்வார். அவர் தொடர்ந்தும் 'இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள். நூஹ் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள் எனக் கூறுவார்: அவர்கள் பின்னர் நூஹ் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் சென்று, 'நீங்கள் இந்தப் பூமியில் மக்களிடம் அல்லாஹ் அனுப்பிய முதல் தூதர் ஆவிர். மேலும் அல்லாஹ் உங்களை 'நன்றியுள்ள அடியார்' என்று புகழ்ந்து அழைத்தான். ஆகவே எங்களுக்காக பரிந்துரை செய்யுங்கள்' என்று கேட்பார்கள் ஆனால் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பதிலளிப்பார்கள்: 'இன்று என் இறைவன் இதுவரை இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை; இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான். அவன் எனது சமூகத்திற்காக ஒரு பிரத்தியேகமான துஆவை தந்தான் நான் அதனை என் சமூகத்தின்மேல் அழிவை வேண்டி செய்தேன். இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள்; இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள்'. அவர்கள் பின்னர் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் சென்று, 'நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் நெருங்கிய நண்பர் (கலீல்). எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று நீங்கள் காணவில்லையா?' என்று கேட்பார்கள்;. அதற்கு இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் கூறுவார்கள் இன்று என் இறைவன் இதுவரை இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான். நான் மூன்று இடங்களில் (உண்மைக்கு எதிராக) பொய் கூறியுள்ளேன்'. அவை: 'நான் உடல்நலக்குறைவாக இருக்கிறேன்' என்று கூறியது. 'இந்தச் செயலை அதாவது சிலையை உடைத்த செயலை இச்சிலைகளில் பெரியது செய்தது' என்று கூறியது. மேலும், தனது மனைவி ஸாராவிடம், நம்ரூதின் தீங்கிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக 'அவனிடம் நான் உன் சகோதரன் என்று கூறு' என்று சொல்லியது. உண்மையில், அந்த மூன்று வார்த்தைகளும் நேரடி பொய்கள். அல்ல அவை மறைபொருள் கொண்ட பேச்சுகள் (மஆரீழ்) ஆகும். ஆனால் அவை வெளிப்படையாகப் பார்க்கும்போது பொய்யைப் போல தோன்றியதால், இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் தம்மை மிகச் சிறியவராக எண்ணி, ஷஃபாஅத் (பரிந்துரை) செய்யத் தயங்கினார்கள். இருந்தாலும், அல்லாஹ்வை அதிகமாக அறிந்தவராகவும், அவனிடம் நெருக்கமான உயர்ந்த அந்தஸ்தினைப் பெற்றவராகவும், அவனை அதிகம் அஞ்சி நடக்கக் கூடியவராகவும இருந்தார். அவ்வாறிருந்தும் அவர்: 'இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள்; மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள் என்று கூறினார். அவர்கள் பின்னர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் சென்று 'மூஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர். அல்லாஹ் உங்களை தனது தூதுவத்தினாலும், தன்னுடன் நேரடியாகப் பேசியதாலும் மக்களிடையே உயர்த்திப் பெருமைப் படுத்தினான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று காணவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறுவார்கள்: இன்று என் இறைவன் எப்போதும் இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை; இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான். நான் ஒருவரை (தவறுதலாக) கொன்றேன். அதற்கான அனுமதி எனக்கு அளிக்கப்படவில்லை. இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள்; மர்யத்தின் மகன் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள். அவர்கள் பின்னர் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் சென்று, 'ஈஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். அல்லாஹ்வின் வார்த்தையாக மர்யத்திற்கு அளிக்கப்பட்டவரும், அவனிடமிருந்து வந்த ஆவியும் நீங்கள். நீங்கள் பாலக நிலையில் இருந்தபோதே மக்களுடன் பேசினீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று காணவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறுவார்கள்: 'இன்று என் இறைவன் இதுவரை இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை; இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான். என்று கூறிவிட்டு அவர் எந்தப் பாவத்தையும் குறிப்பிடாது, 'இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள்; முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செல்லுங்கள்.' என்று கூறுவார்கள். அவர்கள் பின்னர் முஹம்மது நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, 'முஹம்ததே! நீங்கள் அல்லாஹ்வின் தூதரும், இறுதி நபியும் (நபிமார்களின் முத்திரையும் ஆவீர்கள். உங்களின் முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று காணவில்லையா?' என்று வேண்டிக் கொள்வார்கள். அப்போது நான் அர்ஷின் கீழ் சென்று, என் இறைவனுக்கு ஸஜ்தாவில் விழுவேன். அப்போது அல்லாஹ் எனக்கு முன்பு யாருக்கும் அளிக்காத வகையில், அவனைப் புகழ்ந்து போற்றும் சிறப்பான வார்த்தைகளை என் இதயத்தில் திறந்து தருவான். பின்னர் சொல்லப்படும்: 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். கேளுங்கள் — உங்களுக்கு வழங்கப்படும். பரிந்துரை செய்யுங்கள் — உங்கள் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும்.' அப்போது நான் என் தலையை உயர்த்தி, 'என் சமூகத்தார் (உம்மத்), என் இறைவா! என் சமூகத்தார்! என் இறைவா! என் சமூகத்தார்!' என்று கூறுவேன்.' அவ்வாறு அவர்களின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும். அப்போது (நபி ஸல் அவர்களிடம்) சொல்லப்படும்: 'முஹம்மதே! உங்கள் உம்மத்தில் எந்த விசாரணையுமின்றி; (ஹிஸாப் இன்றி) சொர்க்கத்தில் நுழையக்கூடியவர்களை, சொர்க்கத்தின் வலப்பக்க வாயிலில் இருந்து உள்ளே அழைத்துச் செல்லுங்கள். மற்ற வாயில்களில் அவர்கள் மற்ற மக்களுடன் இணைந்தே நுழைவார்கள்'. பின்னர் அவர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் உயிர் எவனின் கையில் உள்ளதோ, அவனையே சத்தியமாகக் கொண்டு சொல்கிறேன்! சொர்க்கத்தின் ஒரு வாயிலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம், மக்கா மற்றும் ஸன்ஆ (யமன்) இடையேயான தூரம் போன்றது அல்லது மக்கா மற்றும் புஸ்ரா (ஷாமின் ஹவ்ரான் நரகம்) இடையேயான தூரம் போன்றது'.