நிச்சயமாக அல்லாஹ் குறைகள் மற்றும் பலவீனங்களை விட்டுத் தூய்மைப்படுத்தப்பட்ட, பரிசுத்தமானவன் என்றும், பரிபூரணம் மிக்க பண்புகள் கொண்டவன் என்றும் செயற்கள், வார்த்தைகள் மற்றும் நம்பிக்கைகள் என அனைத்திலும் அவனுக்கென்றுத் தூய்மையாக இருக்கும், நபியுடைய வழிக்கு நேர்பட்டிருக்கும் பரிசுத்தமானதை மாத்திரமே அல்லாஹ் ஒப்புக் கொள்வான் என்றும் நபியவர்கள் இங்கு அறிவிக்கின்றார்கள். அவ்வாறு மாத்திரம் தான் அல்லாஹ்வை நெருங்கப்படவேண்டும். ஒரு மனிதனின் அமல் பரிசுத்தமடைவதற்கான மிக முக்கியமான ஒரு காரணி, அவனது உணவு ஹலாலானதாகவும், தூய்மையானதாகவும் இருப்பதாகும். அதனூடாகவே அவனது அமல் பரிசுத்தமடைகின்றது. இதனால் தான் அல்லாஹ், ரஸூல்மார்களுக்கு ஹலாலானதை சாப்பிட்டு, நல்லமல்கள் செய்யுமாறு ஏவியது போன்று, விசுவாசிகளுக்கும் ஏவியுள்ளான் "தூதர்களே! நல்லவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள், இன்னும், நற்செயலைச் செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்" , "நம்பிக்கைக் கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு - (வணக்கத்திற்குரியவனான) அவனையே வணங்குபவர்களாக இருந்தால் - நீங்கள் நன்றி செலுத்துங்கள்." பின்பு நபியவர்கள் துஆ ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான பின்வரும் காரணிகளைப் பயன்படுத்தியும், அமல்களைப் பாழ்ப்படுத்தி, துஆ ஏற்றுக்கொள்ளப்படத் தடையாக இருக்கும், 'ஹராமாண உணவை' நபியவர்கள் எச்சரிக்கின்றார்கள். முதலாவதாக, ஹஜ், ஜிஹாத், உறவுகளை சேர்ந்து நடத்தல் போன்ற வணக்கங்களுக்காக நீண்ட பயணம் செய்தல். இரண்டாவதாக, தலைமுடியை வாராமல், பரட்டைத் தலையுடன், நிறம் மாறிய நிலையில், தனது ஆடைகளும் புழுதிபட்ட பட்டநிலையில் இருத்தல். எனவே இவர் ஒரு நிர்ப்பந்த நிலையில் இருக்கின்றார். மூன்றாவதாக, தனது இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, துஆக் கேட்டல். நான்காவதாக, அல்லாஹ்வின் பெயர்களை முன்னிறுத்தி, யா ரப்பு! யா ரப்பு! என மீண்டும் மீண்டும் கேட்டல். துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான இவ்வாறான காரணங்கள் இருந்தும், அது ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. ஏனெனில், அவனது உணவும், பானமும், ஆடையும் ஹராமாகும். அவன் ஹராமாலேயே ஊட்டப்பட்டுள்ளான். இவ்வாறான தன்மை உடையவர்களுக்கு பதிலளிக்கப்படுவதென்பது மிகத் தூரமானது. அவனுக்கு எவ்வாறு பதிலளிக்கப்படும்?