முஆத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நான் நபியவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். ஒரு நாள் பயணித்துக்கொண்டிருக்கும் போது நான் நபியவர்களை நெருங்கிவிட்டேன். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய தூதரே! என்னை நரகை விட்டுத் தூரப்படுத்தி, சுவனத்தில் நுழைய வைக்கும் ஒரு அமலை எனக்குக் காட்டித் தாருங்கள்' எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'மனித ஆத்மாக்களால் செய்யச் சிரமமான ஒரு அமலைப் பற்றி நீங்கள் கேட்டுள்ளீர்கள். யாருக்கெல்லாம் அல்லாஹ் அதனை இலகுபடுத்திக் கொடுக்கின்றானோ, அவர்களுக்கு அது இலகுவாக இருக்கும். இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுங்கள் : முதலாவது : அல்லாஹ்வுக்கு எந்த இணையும் வைக்காது அவனை மாத்திரமே வணங்க வேண்டும். இரண்டாவது, தினமும் கடமையாக்கப்பட்டுள்ள ஸுபஹ், ளுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகிய ஐவேளைத் தொழுகைகளையும், நிபந்தனைகள், அடிப்படைகள் மற்றும் கடமைகளைப் பேணித் தொழவேண்டும். மூன்றாவது, கடமையான ஸகாத்தைக் கொடுக்க வேண்டும். ஸகாத் என்பது, ஒரு சொத்து, குறிப்பிட்ட ஒரு அளவை அடையும் போது கடமையாகும் பணம் சார்ந்த ஒரு வணக்கமாகும். தகுதியானவர்களுக்கு அது ஒப்படைக்கப்பட வேண்டும். நான்காவது, நோன்பு நோற்கவேண்டும். அதாவது, வணக்கம் என்ற நோக்கத்துடன், அதிகாலை உதயமாகியதில் இருந்து, சூரியன் மறையும் வரை உணவு, பானம் போன்ற நோன்பை முறிக்கும் அனைத்தையும் தவிர்த்தல். ஐந்தாவது : ஹஜ் செய்தல். அதாவது, மக்காவை நாடிச் சென்று, அல்லாஹ்வை வழிபடும் நோக்கில் ஹஜ்ஜுடைய கிரியைகளை நிறைவேற்றல். பின்பு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : நன்மையின் வாயில்களை அடையச் செய்யும் காரணிகள் பற்றி உமக்கு அறிவித்துத் தரட்டுமா? அதாவது, அந்தக் கடமைகளுடன், உபரியானவற்றையும் நீ செய்யவேண்டும் : முதலாவது: உபரியான நோன்புகள். இவை இச்சைகளை உடைத்து, பலத்தைக் குறைத்து பாவத்தில் வீழ்வதைத் தடுக்கின்றன. இரண்டாவது : உபரியான தர்மங்கள். இவை செய்யப்பட்ட பாவங்களை அணைத்து, அழித்து, அதன் தடயங்களையும் நீக்கிவிடும். மூன்றாவது : இரவுடைய இறுதி மூன்றில் ஒரு பகுதியில் தஹஜ்ஜுத் தொழுதல். பின்பு நபியவர்கள் "அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து விலகிவிடும்; அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும், ஆர்வத்தோடும் (தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதல், துஆக் கேட்டல் போன்றவற்றின் மூலம்) பிரார்த்தனை செய்வார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களின் குளிர்ச்சியை (மறுமை நாளில் அவர்களது கண்களைக் குளிரச் செய்பவை மற்றும் சுவனத்தில் உள்ள இன்பங்களை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது." என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பின்பு நபியவர்கள், 'மார்க்கத்தின் அடிப்படையையும், அது தாங்கியிருக்கும் தூணையும், அதன் உச்சநிலையையும் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'ஆம்! யா ரஸூலல்லாஹ்' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள் : அடிப்படையான அம்சம் இஸ்லாமாகும். அதாவது, ஷஹாதத் கலிமாவாகும். அதன் மூலம் தான் மார்க்கத்தின் அடிப்படையை அவன் அடைந்து கொள்கின்றான். அதன் தூண் தொழுகையாகும். தூண்கள் இல்லாமல் வீடில்லை என்பது போன்று, தொழுகையில்லாமல் இஸ்லாம் இல்லை. யார் தொழுகின்றாரோ, அவரது மார்க்கம் பலமடைந்து, உயர்வடைந்துவிடும். அதன் உயர்நிலை, அதாவது, அது உயர்வடைவது, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உயரச் செய்வதற்காக சிரமப்பட்டு, மார்க்கத்தின் எதிரிகளோடு போரிட்டு ஜிஹாத் செய்யும் போதே! பின்பு நபியவர்கள், 'முன்சென்ற அனைத்தையும் முறையாகப் பேணிப் பாதுகாக்கும் ஒன்றைக் கூறட்டுமா?' எனக் கேட்டுவிட்டு, தமது நாவைப் பிடித்து, 'இதைத் தடுத்துக்கொள். அவசியமில்லாத எதனையும் பேசிவிடாதே' என்று கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'நாம் பேசுகின்ற அனைத்துக்கும் அல்லாஹ் எம்மை விசாரித்துத் தண்டிப்பானா?' என்று கேட்கின்றார்கள். அதற்கு நபியவர்கள், 'உன் தாய் உன்னை இழக்கட்டும்' (இங்கு அவர்களுக்கெதிராக துஆச் செய்வது நோக்கமல்ல. அறிந்து, விழிப்புடன் இருக்கவேண்டிய ஒரு விடயம் பற்றி விழிப்பூட்டும் போது அரபிகள் பாவிக்கும் ஒரு வார்ததையாகும்.) என்று கூறிவிட்டு, 'அவர்களின் நாவுகளின் அறுவடைகளாகிய, நிராகரிப்பு, ஏசுதல், புறம், கோள், இட்டுக்கட்டல் போன்றவற்றைத் தவிர, வேறு எவைதான் அவர்களை நரகில் முகங்குப்புற எறிகின்றன?' என்று கேட்டார்கள்.